விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் குவிந்ததால் திருத்தணி முருகன் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
முருகனின் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் பொதுவழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில் மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். போலீசார் அனைத்து வாகனங்களையும் கோர்ட்டு பின்புறம் நிறுத்த அறிவுறுத்தினர். பின்னர் பக்தர்கள் அனைவரும் ஆட்டோக்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் அதிக கட்டணம் செலுத்தி மலைக் கோவிலுக்கு ஆட்டோக்களில் சென்று வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே முருகன் கோவில் நிர்வாகம் கிருத்திகை மற்றும் விடுமுறை தினங்களில் கூடுதல் பேருந்துகளை மலைக் கோவிலுக்கு இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






