திருச்செந்தூர் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

நேற்று விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாகி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. திருவிழா, பண்டிகை, விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது தைப்பூச விழா நெருங்கி வருவதை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலை நேக்கி வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்தனர்.
கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகளவில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.






