காவிரி டெல்டா பகுதியின் திவ்ய தேசங்கள்


காவிரி டெல்டா பகுதியின் திவ்ய தேசங்கள்
x

ஸ்ரீரங்கம் தெற்கு ராஜ கோபுரம் மற்றும் கிழக்கு வெள்ளை கோபுரம்

108 வைணவ திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

மூவுலகையும் காப்பவர் பரம்பொருள் நாராயணன் எனும் திருமால். இவர் பெருமாள், மாயோன், விஷ்ணு, பரமாத்மா என பல்வேறு பெயர்களை கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலங்கள் எண்ணிலடங்காதவை என்றாலும், அவற்றில் 108 திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்பு மிக்க வைணவ திருத்தலங்கள் ஆகும். இதில் முதன்மையான தலம் திருவரங்கம் அரங்கநாதசாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில் அலுவலராக பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவ தலங்களை 108 என்று வரையறை செய்து, நாடு வாரியாக பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது ‘நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி’ என்னும் நூலாக வெளிவந்துள்ளது. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில்...

108 வைணவ திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தராகண்டிலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகத்திலும் உள்ளன.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, கண்டியூர், திருக்கூடலூர், கபிஸ்தலம், புள்ளபூதங்குடி, ஆதனூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை, நாதன்கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சை ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை, திருச்சிறுப்புலியூர், நாகை மாவட்டத்தில் திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, நாகை ஆகிய இடங்களிலும் வைணவ திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர், தலைச்சங்காடு, திருஇந்தளூர், சீர்காழி, தாடாளன்கோவில், திருவாழி-திருநகரி ஆகிய இடங்களும் வைணவ திவ்ய தேச தலங்களாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் 11 வைணவ திவ்ய தேச தலங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புராண வரலாற்று சிறப்புடைய இக்கோவில்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளையும், தாயாரையும் தரிசித்து செல்கிறார்கள்.

திருநாங்கூர் வரதராஜ பெருமாள் கோவில்

திருநாங்கூர் திருப்பதிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநாங்கூர் பகுதியில் 11 திருப்பதிகள் அமைந்துள்ளன. இதில் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள 6 திவ்ய தேசங்களையும், இந்த ஊரை சுற்றி அருகருகே அமைந்துள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து ‘திருநாங்கூர் திருப்பதிகள்’ என அழைக்கப்படுகின்றன. திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்தவிண்ணகரம், திருத்தேவனார்த்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளக்குளம் ஆகியவை திருநாங்கூர் திருப்பதிகளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோவில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார்கள். இந்த கருட சேவையை காண்பதற்கு திரளான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.

திவ்ய தேசங்கள் அமைந்திருக்கும் இடங்கள்

108 திவ்ய தேசங்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-

சோழநாட்டு திருப்பதிகள் - 40

நடுநாட்டு திருப்பதிகள் - 2

தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22

வடநாட்டு திருப்பதிகள் - 11

மலைநாட்டுத் திருப்பதிகள் - 13

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

1 More update

Next Story