ஆடி மாத முதல் வெள்ளி - கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை,
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் தனிச்சிறப்பு பெற்றவை ஆகும். ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த வருடம் ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பழமை வாய்ந்த வீரமாகாளி அம்மன் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவிலில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.
அதே போல், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலில் உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு, சூடம் ஏற்றியும், பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.






