திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் அலங்கார வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர் (சோமாஸ்கந்த மூர்த்தி), காமாட்சி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகி தேர்) நடைபெற்றது. பஜனை கோஷ்டியினர் சங்கீர்த்தனங்கள் பாட, கலைஞர்களின் உற்சாகமான கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நகர வீதிகளில் தேர் வலம் வந்தது.

அதன்பிறகு உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்திக்கும், காமாட்சி தாயாருக்கும் அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, மகா சிவராத்திரி விழாவும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணி முதலே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள சிவ லிங்கங்கள் மற்றும் நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை காலை 6 மணி முதல் 7 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story