திருப்புடைமருதூர் சிவன் கோவில் சிறப்புகள்


திருப்புடைமருதூர் சிவன் கோவில் சிறப்புகள்
x
தினத்தந்தி 13 Jun 2025 5:42 PM IST (Updated: 13 Jun 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

தேவர்கள் திருப்புடைமருதூர் வந்து பிரம்ம தண்டத்தையும், சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.

திருநெல்வேலி

தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள சிவாலயம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில். இவ்வாலயத்தின் புராண பெயர் புடார்க்கினியீஸ்வரர். காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள். "நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ" எனக்கேட்ட கருவூர் சித்தரின் வாக்கினைச் சாய்ந்து கேட்டதால் சுயம்புலிங்கமான நாறும்பூநாதர் சற்றே சாய்ந்தே காணப்படுகிறார்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவதற்கு காசிக்கு நிகரான சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள். இதுபற்றி சிவபெருமானிடம் கேட்க, அவர் பிரம்ம தண்டத்தை தரையில் இடும்படி கூறினார். அதன்படி தேவர்கள் பிரம்மதண்டத்தை தரையில இட, அது தாமிரபரணி ஆற்றைக் கடந்து கரையில் ஏறி நின்றது. அந்த இடமே காசிக்கு நிகரான தலம் என சிவபெருமான் கூறினார். அந்த தலம்தான் திருப்புடைமருதூர். சிவபெருமான் கூறியபடி, தேவர்கள் அனைவரும் திருப்புடைமருதூர் வந்து பிரம்ம தண்டத்தையும், சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து வணங்கி சிவபெருமானின் அருளை பெற்று தேவலோகம் திரும்பினார்கள். அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப்போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான். அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்தபோது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான். அந்த மானின் மீது அவன் அம்பை எய்ய, அந்த மானோ ஒரு மருத மர பொந்திற்குள் சென்று மறைகிறது. அந்த மரத்தை வெட்டும்படி மன்னன் உத்தரவிட, வீரர்கள் அந்த மரத்தை கோடரியால் வெட்டினர். அப்போது, அவ்விடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. பின்னர் அந்த இடத்தில் மன்னர் பார்த்தபோது, கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருந்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தது சிவபெருமான்தான் என அசரீரி கேட்டது. 'இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயாக' என அசரீரி ஒலிக்க, இறைவனின் உத்தரவுப்படி இங்கு திருக்கோவில் கட்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என இத்தல புராணம் கூறுகிறது.

இன்றைக்கும் தலபுராண வரலாற்றில் சொல்லப்பட்ட பிரம்ம தண்டத்தை, முதலாம் கிழக்குச் சுற்றில் பரிவார தேவதை சன்னதியான சூரியன் சன்னதியில் கண்டு தரிசிக்கலாம். இத்தரிசனக் காட்சி வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள சிவபெருமான், தலையில் கோடரியால் வெட்டுபட்ட தடம் மற்றும் மார்பில் அம்பு பாய்ந்த தடத்துடன் (மானின் மீது பாய்ந்த அம்பு) காட்சி தருகிறார்.

1 More update

Next Story