வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்


தினத்தந்தி 2 Nov 2024 12:19 PM (Updated: 2 Nov 2024 12:20 PM)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.

சென்னை,

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்த திருத்தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்தில் முருகனை தரிசிப்பதற்காக இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களுக்கும் பக்தர்கள் இன்று தங்கள் குடும்பத்தோடு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்துச் சென்றனர். சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மனமுருக முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

1 More update

Next Story