கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 21-ந்தேதி தொடங்குகிறது


கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 21-ந்தேதி தொடங்குகிறது
x

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, 27-ந்தேதி மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சூரபத்மனை அழித்ததால் ஏற்பட்ட வீரகத்தி தோஷம் விலகும் பொருட்டு வடதிசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் தவம் செய்யும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி‌‌ விழா வருகிற 21-ந்தேதி (செவ்வாய் கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு 22-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி யானை வாகனத்திலும், 26-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. 27-ந்தேதி மதியம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை ஆட்டுகிடா வாகனத்தில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி சூரசம்காரம் நிகழ்ச்சியும், அன்று இரவு மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 28-ந்தேதி சரவணப் பொய்கை திருக்குளத்தில் தீர்த்தவாரி, 29-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், தக்கார் மணிகண்டன், ஆய்வாளர் புவனேஸ்வரன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துவருகின்றனர்.

1 More update

Next Story