கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 9-மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதி தெரு, தெற்கு ரதவீதி நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழ ரத வீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன் பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. அதன்பிறகு 10 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர், கீழ ரதவீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் கீழ ரத வீதியில் பகல் 1.30 மணிக்கு நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர். தேரோடும் வீதிகளில் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், தண்ணீர் பாட்டில், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்ப்ட்டன
தேர் நிலைக்கு நின்றதும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்று மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பக்தி கர்நாடக இசையும், 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.






