பவித்ர உற்சவம் நிறைவு: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமி வீதிஉலா

சுவாமி வீதிஉலாவைத் தொடர்ந்து சிறப்பு ஹோமம் மற்றும் பவித்ர உற்சவம் நிறைவு பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் விழாக்கள் மற்றும் உற்சவங்களின்போது அறிந்தும் அறியாமலும் நடந்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக பவித்ர உற்சவம் கடந்த 31-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 4 நாட்கள் நடந்த இந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
பவித்ர உற்சவ நிறைவு நாளான நேற்று காலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சன சேவை மற்றும் அபிஷேகமும் நடத்தப்பட்டது.
மாலையில் ஆறாம் கால யாகசாலை பூஜையும் அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, புனித நீர் கலச ஊர்வலம், கும்பப்ரோஷனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் வரதப்பட்டர் மற்றும் கங்கன பட்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 10 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி திருப்பதி குடையுடன் மேள தாளங்கள் முழங்க மாடவீதிகளில் பவனிவந்து பக்தர்களுகு அருள்பாலித்தார். அதன் பிறகு சிறப்பு ஹோமம் மற்றும் பவித்ர உற்சவம் நிறைவு பூஜை, சுவாமி பள்ளியறை எழுந்தருளுல், ஏகாந்த சேவை நடந்தது.
விழாவில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, திருமலை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் சுமதி, முன்னாள் அறங்காவலர்கள் மோகன்ராவ், லட்சுமி நரசிம்மராவ், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமிபதி, பா.ஜ.க. தன்னார்வ தொண்டு பிரிவு மாநில செயலாளர்கள் ஜெயராம், முனிராஜ், குமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. துணை தலைவர் ஜெகநாதன் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் கிருஷ்ணமூர்த்தி உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






