கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் - குவியும் பக்தர்கள்

மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பெயர் சூட்டி அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.

மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்தநேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.18 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.37மணிக்கு நிறைவடைகிறது. அதனால் நாளை முதல் 5-ந் தேதி வரையில் 3 நாட்கள் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். திருவண்ணாமலை நகரை சுற்றி இணைக்கும் புறவழிச்சாலைகள் உள்பட 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 130 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி, இலவச பஸ் வசதி போன்றவை செய்யப்பட்டு உள்ளது. கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட 231 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.






