கார்த்திகை பிரம்மோற்சவம்... பெரிய சேஷ வாகனத்தில் பரமபதநாதராக அருள்பாலித்த பத்மாவதி தாயார்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை மூலவர் மற்றும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. அதன்பிறகு திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

இதையடுத்து காலை 9.15 மணியளவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியை தங்கக் கொடிமரத்தில் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.

நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், கங்கணப்பட்டர் சீனிவாச ஆச்சாரியார், அர்ச்சகர் பாபுசுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் பேசுகையில், கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக நடக்கும் கஜ வாகனம், பஞ்சமி தீர்த்தம் நாளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது, என்றார்.

அதைத்தொடர்ந்து திருச்சானூரில் உள்ள சுக்ரவாரத் தோட்டத்தில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று காலையில் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. சக்தி வாய்ந்த பெரிய சேஷ வாகனத்தில், பத்மாவதி தாயார் பரமபதநாதராக சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொட்டும் மழையிலும் மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தாயாரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருமலையின் பெரிய ஜீயர் சுவாமிகள், சிறிய ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.கே.சிங்கால், இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story