கேதார கௌரி விரதம்: கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் கேதார கௌரி விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபட்டனர்.
சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை வரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்கிறார்கள். கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரியாமல் இருக்கவும் இந்த விரதத்தை இருப்பார்கள்.
கேதார கௌரி விரதமானது பாரம்பரியமாக 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதமாக இருந்தாலும்,, உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து, பலர் இப்போது ஒரு நாள் அதாவது, விரதம் நிறைவு செய்யும் நாளான அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபடுகிறார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டு கேதார கௌரி விரதம் இருந்தவர்கள் அமாவாசை தினமான இன்று (21-10-2025) இன்று சிறப்பு பூஜைகள் செய்து விரதத்தை நிறைவு செய்தனர். ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்களும் இன்று விரதம் கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோவில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழைய சப்-ஜெயில் சாலை வரசித்தி விநாயகர் கோவில்களில் பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தைக் கொண்டு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதே போல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். கௌரி அம்மனுடன் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.
இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வீடுகளில் அதிரசம் சுட்டும், சிலர் கோவில்களில் சாமிக்கு படைத்தும் வழிபட்டனர்.






