சீனிவாச மங்காபுரத்தில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்.. இன்னும் 4 நாட்களில் பிரம்மோற்சவம் ஆரம்பம்

சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து 10.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் தாமிர, பித்தளைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தூய நீரால் கழுவி சுத்தப்படுத்திய பின், நாமக்கொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரிமஞ்சள், பச்சைக்கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த நறுமணக் கலவை கோவில் முழுவதும் பூசப்பட்டது.
அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் இலவச தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.






