அரபிக் கடல் அதிசயம்..! கோலியாக் கடல் கோவில்


அரபிக் கடல் அதிசயம்..! கோலியாக் கடல் கோவில்
x

கோலியாக் கடல் கோவிலானது, குருஷேத்திர போருக்குப் பிறகு பஞ்சபாண்டவர்கள் கட்டியெழுப்பி வழிபட்ட ஸ்தலம் என்று நம்பப்படுகிறது.

முன்னோர்கள் கட்டியெழுப்பிய கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருப்பதை காணலாம். பக்தர்கள் அதிக அளவில் வருகை தரக்கூடிய பெருங்கோவில்கள் மட்டுமின்றி, கிராமக் கோவில்கள், குல தெய்வ கோவில்கள், கரடு முரடான பாதைகளில் பயணித்து சென்று தரிசனம் செய்யக்கூடிய மலைக்கோவில்கள் என ஒவ்வொன்றும் நமது பாரம்பரிய கட்டிடக்கலைக்கு சான்றாக அமைந்துள்ளன. இதில் அதிசயங்கள் நிறைந்த சில கோவில்கள், நவீன கால கட்டுமான தொழிலநுட்பத்தையும் மிஞ்சும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், குஜராத் மாநிலத்தின் 'பாவ்நகர்' மாவட்டம் "கோலியாக்" என்ற இடத்தில் அமைந்துள்ள கடல் கோவிலும் தனிச்சிறப்பு பெற்று திகழ்கிறது.

கடலுக்குள் சிறிய தீவு போல் உள்ள பாறையின் மீது அமைந்துள்ள இந்த சிவன் கோவிலின் பெயர் நிஷ்கலங்க் மகாதேவ் கோவில். தினந்தோறும் நிகழும் அதிசயம் என்று சொல்லும் வகையில், பக்தர்கள் கடலுக்குள் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர்.

கடலுக்குள் மூழ்கியே இருக்கும் இந்த கோவில் கடல் உள்வாங்கும்போது மட்டுமே வெளியே தெரியும். கடல் உள்வாங்க, மக்களும் அதை தொடர்ந்து அப்படியே காலாற கடலில் நடந்து போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கடல் இயல்பு நிலைக்கு வருவதற்குள் ஓடிவந்து விடுகிறார்கள். எனவே, இந்த கோவில் அரபிக் கடல் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

இந்த கடற்பரப்பு நாள்தோறும் உள்வாங்கக் கூடியது. பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். இதனால் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் கடல் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். லட்சக்கணக்கான மக்கள் நடுக்கடலில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்வர். ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகளை பாவ்நகர் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

நடுக்கடலில் ஒரு காலத்தில் சிவன் கோவில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த கோவில் சிதிலமடைந்து போயுள்ளது. இங்கு ஐந்து சிவலிங்கங்களும், ஒவ்வொரு சிவலிங்கத்தையும் பார்த்தபடி தனித்தனி நந்தியும் இருக்கின்றன. இது குருஷேத்திர போருக்குப் பிறகு பஞ்சபாண்டவர்கள் கட்டியெழுப்பி வழிபட்ட ஸ்தலம் என்று நம்பப்படுகிறது.

பாவ்நகரை எளிதில் சென்றடையும் வகையில் ரெயில் மற்றும் விமான போக்குவரத்து உள்ளது. பாவ்நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோலியாக் கிராமம். இக்கிராமத்தின் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் இருக்கிறது கோவில்.

கடுமையான அலைகளை தாங்கும் வகையில் கட்டப்பட்ட இந்தக் கோவில், நவீன கால பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு புலப்படாத மர்மமாகவே உள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கும், ஆன்மிக யாத்திரை செல்பவர்களுக்கும் இந்த கோவிலில் தரிசனம் செய்வது புதிய அனுபவத்தை வழங்கும்.

1 More update

Next Story