கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்

ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக அம்பாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் (பொறுப்பு) வள்ளிநாயகம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் மண்டக படிதாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். இரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.






