புண்ணியங்கள் வந்துசேரும் கிருஷ்ண ஜெயந்தி


புண்ணியங்கள் வந்துசேரும் கிருஷ்ண ஜெயந்தி
x

விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்த தினமான இன்று கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ண அவதாரம்;

திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார்.

அதன்படி போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை சந்தோசப்படுத்த 400 யானைகள், 15 ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள் என்று தேவகிக்கு சேசகம் செய்ய 200 பணிப்பெண்கள் என்று பிரம்மாண்டமாக திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வரும்போது கம்சனுக்கு ஒரு அசரிரீ ஒலிக்கிறது. அதில் கம்சா நீ உன் சகோதரிக்கு தேரோட்டி செல்கிறாய். ஆனால் இவளுடைய 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான் என்ற சத்தத்தை கேட்ட கம்சன் தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயற்சி செய்கிறான்.

உடனே தேவகியின் கணவரான வாசுதேவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு கம்சனே உனக்கு கேட்ட அந்த அசரிரீ உண்மை என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையை உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறோம். நீ என்னவேண்டுமோ செய்துகொள் என்று சொல்லி கம்சனிடம் இருந்து தேவகியின் உயிரை காப்பாற்றினார்.அதன்பிறகு தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. வாக்கு தவறாத வாசுதேவர் சொன்ன சொல்லை தவறாமல் குழந்தையை கம்சனிடம் கொடுத்தார். அதற்கு கம்சன் உன்னுடைய 8-வது குழந்தையால் தான் எனக்கு மரணம். இந்த குழந்தை தேவை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார். கிருஷ்ணரின் வருகைக்காக காத்திருக்க முடியாத நாரதர், வசுதேவர் உன்னை ஏமாற்றலாம் 7 வது குழந்தையை காட்டி இதுதான் 8-வது குழந்தை என்று கூறலாம். எனவே இருவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு. எந்த குழந்தையால் கூட உனக்கு ஆபத்து வரலாம் என்று கூறினார் நாரதர். நாரதர் பேச்சை கேட்டு பயந்த கம்சன், எந்த குழந்தையையும் நம்ப முடியாது வரிசையாய் எல்லா குழந்தையையும் கொன்றுவிட எண்ணினார். அதற்கு முதலில் தன்னுடைய தந்தையான உக்கிரசேனனை சிறையில் அடைத்து அரசனாக முடிசூடிக்கொண்டார். அதன்பிறகு வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறந்த 6 ஆண்குழந்தைகளையும் வரிசையாக வதம் செய்தார்.

தேவகி 7-வது முறையாக கர்பம் அடைந்தார். கிருஷ்ணருக்கு உதவியாக அனந்தனாகிய ஆதிசேஷன் தோன்றினார். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று எண்ணிய விஷ்ணுபகவான் தன்னுடைய யோக சக்தியால் தேவகியோட 7-வது கர்ப்பம் கோகுலத்தில் வாழும் வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினியின் வயிற்றுக்கு மாற்றப்படுகிறது. 8-வது முறையாக ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர வம்சத்தில் விஷ்ணு பகவானே பூமாதேவிக்கு வாக்களித்தபடி பூலோகத்தில் பிறக்கிறார். அவர் பிறந்ததும் நான்கு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் வசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி கொடுத்தார்.வசுதேவரும், தேவகியும், கம்சனை பற்றிய பயம் துளியுமின்றி முழுமுதற்கடவுளான விஷ்ணுவை வணங்கினர்.

விஷ்ணு பகவான் கோகுலத்தில் உன் நண்பனான நந்தனுக்கும், அவனது மனைவி யசோதைக்கும் பிறந்த பெண்குழந்தையை எடுத்துவா நான் யசோதையின் மகனாய் கோகுலத்தில் வளர்கிறேன். உரிய காலம் வரும்போது கம்சனை வதம் செய்து உங்களையும் மீட்கிறேன் என்று கூறினார் விஷ்ணு. விஷ்ணுவும் சிறைகாவலர்களை மயக்கமடைய செய்து வசுதேவரின் மூலம் கோகுலத்தில் யசோதையின் மகனாக கிருஷ்ணர் வளர்கிறார். வசுதேவர் நந்தனின் மகளை மதுராவிற்கும் எடுத்து வந்துவிடுகிறார். சிறையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போகிறார்.என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று அந்த பெண்குழந்தையை எடுத்து சுவற்றில் அடிக்கும் போது விஷ்ணுவின் இளைய சகோதரி துர்க்கையின் வடிவத்தில் காட்சி தந்து உன்னை கொல்லப்போகும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று கூறிவிட்டு அந்த பெண்குழந்தை மாயமாக மறைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில், தன் தங்கையின் குழந்தை கண்ணன் (கிருஷ்ணர்) என்ற பெயரில் வளர்ந்து வருவதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, சகடாசுரன் என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே வதம் செய்தார் கிருஷ்ணர்.

அதேசமயம், கோகுலத்தில் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார் கிருஷ்ணர். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டிய கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியுடன் கூடிய நாள், பக்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகும். அவ்வகையில், இந்த ஆண்டு 16-8-2025 அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாக நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

மேலும், வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாதச் சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள். மகாராஷ்டிரா, வடஇந்திய மாநிலங்களில் பிரபலமான ‘தஹி ஹண்டி’ விளையாட்டும் தமிழ்நாட்டில் உறியடி விழாவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 சனிக்கிழமை நடைபெறும்.

கிருஷ்ண ஜெயந்தி நோன்பு

கிருஷ்ணரின் பிறந்த நாளன்று பக்தர்கள் இரண்டு விதமான நோன்புகளை கடைபிடிக்கிறார்கள் – நிர்ஜலா (தண்ணீர், உணவு எதுவும் இல்லாமல்) மற்றும் பலஹார் (பழம், பால், தயிர் போன்ற எளிய உணவு மட்டுமே). தர்ம சாஸ்திரப்படி, நோன்பு ஆகஸ்ட் 16 இரவு 9.34 மணிக்கு முடிக்கலாம். சில பாரம்பரிய வழக்கங்களில் அதிகாலை 5.51 மணி வரை விரதத்தை நீடிப்பார்கள். நவீன வழக்கப்படி, நிஷித பூஜை முடிந்தவுடன் (அதிகாலை 12.47 மணி) நோன்பு முடிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.

1 More update

Next Story