குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் முத்தாரம்மன் வீதிஉலா

காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி என பல்வேறு வேடமணிகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர்.
முதல்நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
2ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த காட்சியை திரளான பக்தர்கள் கண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) இரவில் முத்தாரம்மன் ரிசப வாகனத்தில் (பார்வதி திருக்கோலம்) வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர்.
அவர்கள் 6-ம் திருவிழாவான 28-ந் தேதி முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
மகிஷாசர சம்ஹாரம்
வருகிற 2-ந் தேதி இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மகிஷாசுரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது.
11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கம் நடைபெறும். அப்போது பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடிப்பார்கள்.






