திருமலையில் குமாரதாரா, பசுபுதாரா தீர்த்த முக்கொடி விழா: மதியம் வரை மட்டுமே மலையேற அனுமதி

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
திருமலை:
சேஷாசல மலைத்தொடரில் இருக்கும் முக்கிய தீர்த்தங்களில் குறிப்பிட்ட தினங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் கரடுமுரடான மலைப்பாதையில் பயணித்து இந்த தீர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபடுவது வழக்கம்.
அவ்வகையில் குமாரதாரா மற்றும் பசுபுதாரா தீர்த்த முக்கொடி விழா வரும் வெள்ளிக்கிழமையன்று (14.3.2025) நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல் பருமன் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீர்த்த பாதையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கோகர்பம் அணையில் இருந்து பாபவினாசம் அணை வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் மட்டுமே பக்தர்கள் பயணம் செய்ய முடியும். பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறிச் சென்று தீர்த்தத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாபவினாசம் அணையில் அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதம், மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்படும். மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.






