தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம்


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம்
x

தேத்தாகுடி தெற்கு ஊராட்சி அகிலாண்டேஸ்வரி சமேத அழகியநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

தினத்தந்தி 14 Sept 2025 1:49 PM IST (Updated: 14 Sept 2025 2:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தேத்தாகுடி

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அழகியநாத சுவாமி ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று இன்று காலை, புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து, அந்த புனித நீரால் விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குடவாசல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திப்பணம்பேட்டையில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் ஸ்ரீ படைக்கரசி அம்மன் உள்ளது. இக்கோவிலின் திருப்பணி வேலைகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தி, கலாகர்ஷனம் என தொடர்ந்து 4 கால பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் இன்று யாக சாலையில் வைத்து சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்ட கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 8.15 அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய், செயல் அலுவலர் கங்காதரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

உத்தமசோழபுரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வீரபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அக்கிராமத்தினர் முடிவு செய்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிந்து இன்று மகா குடமுழுக்கு நடந்தது.

குடமுழுக்கையொட்டி, கடந்த 12-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம் நடந்தது. 13-ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை யாக சாலை பூஜைகளைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவையாறு

திருவையாறு மேலவீதி கல்கிஅகரஹாரம் தெற்குவீதி சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 12 ம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. அன்று மாலை காவிரியாறு புஷ்ய மண்டப படித்துறையிலிருந்து யாக சாலைக்கான புனித நீர் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள் இன்று நிறைவு பெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

எடையூர்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்திட கிராம மக்கள் முடிவு செய்து, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

கணபதி பூஜை, மஹாலட்சுமி பூஜை, நவகிரஹ பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி என பல்வேறு வேள்விகள் நடைபெற்றன. இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிவுற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கும்ப கலசங்களுடன், கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் செல்லியம்மனுக்கும் புனித நீரினை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story