சந்திர கிரகணம்; திருத்தணி முருகன் கோவில் இன்று திறந்திருக்கும்

இரவு எப்போதும் போல் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
இயற்கையாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இதில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்கள் உண்டு. இந்த கிரகணங்கள் மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும். தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், செப்டம்பர் 7-ந்தேதி (இன்று) ஞாயிற்றுக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இரவு 9:56 க்கு துவங்கி 1:26 வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. கிரகண நேரங்களில் பெரும்பாலும் கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இருப்பினும் சில கோவில்கள் வழக்கம்போல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் திருத்தணி முருகன் கோவில் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கும் என்றும், இரவு எப்போதும் போல் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






