விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மகா சஷ்டி சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர்
மகா சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டி பிராது கட்டினால் 90 நாட்களில் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இவ்வாறு ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில், மஹா சஷ்டியை முன்னிட்டு, கடந்த ஆறு நாட்களாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று மஹா சஷ்டி என்பதால் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.






