மகாளய அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவா் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் அமாவாசை தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவது உண்டு. குறிப்பாக தை, சித்திரை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதாலும், பக்தர்கள் இந்த கோவில் அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இன்று அதிகாலை கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலுக்குச் சென்று மூலவர் வீரராகவப் பெருமாளை சுமார் 3 மணி நேரம் வரிசையில் நின்று வழிபட்டனர்.
பின்னர் கண்ணாடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.








