மகாளய அமாவாசை... நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


நீர்நிலைகள் மற்றும் கோவில் வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான முக்கியமான நாள் அமாவாசை ஆகும். அதிலும் மகாளய அமாவாசையன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த பலனை பெற்று தரும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் தர்ப்பணம் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைப்பதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிடைத்து குடும்பம் தழைத்தோங்கும், குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மகாளய பட்ச காலம் (15 நாட்கள்) பித்ருக்களுக்கு உரிய காலமாகும். இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வந்து அவர்களின் சந்ததியினர் செய்யும் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். எனவே, மற்ற அமாவாசை நாட்களை விட மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.

அவ்வகையில் இன்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு முக்கிய நீர்நிலைகள், ஆற்றங்கரைகள், படித்துறைகள் மற்றும் கோவில் வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மூதாதையர்களை நினைத்து காய்கறிகள், அரிசி, எள், பழம், சமையல் பொருட்களை வைத்து திதி கொடுத்து தர்ப்பண வழிபாடு நடத்தினர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றங்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை போன்ற இடங்களிலும், கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story