மாவடிபண்ணை கோவில் கொடைவிழா: முத்தாரம்மன் சப்பர பவனி


மாவடிபண்ணை கோவில் கொடைவிழா: முத்தாரம்மன் சப்பர பவனி
x

முக்கிய வீதிகள் வழியாக சென்ற சப்பரம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு ஏராளமான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நள்ளிரவு 12.30 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து சிறப்பு வாண வேடிக்கை நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து முத்தாரம்மனுக்கு தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். ஆங்காங்கே அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் சப்பரத்தில் அம்மன் கோவிலை சென்றடைந்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இவ்விழாவில் மாவடிபண்ணை ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story