மதுரை மட்டுமல்ல... இந்த தலங்களிலும் ஆற்றில் எழுந்தருளிய அழகர்


மதுரை மட்டுமல்ல... இந்த தலங்களிலும் ஆற்றில் எழுந்தருளிய அழகர்
x
தினத்தந்தி 12 May 2025 11:05 AM IST (Updated: 12 May 2025 11:22 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தருளினார். இந்நிகழ்வைக் காண சுமார் 15 லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் வேறு சில பெருமாள் கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள் கள்ளழகர் அலங்காரத்தில் ஆற்றில் இறங்கி அருள்பாலித்தனர்.

அணைப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஊராட்சி, மாலப்பட்டியில் உள்ள நரசிங்க பெருமாள் கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் அலங்காரத்துடன் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டார். பிள்ளையார் நத்தம், பெருமாள்பட்டி, செக்காபட்டி, சிறு நாயக்கன்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, அணைப்பட்டி மற்றும் வைகை ஆற்று படுகையில் உள்ள அம்மன் கோயில் வழியாக வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்.

தாடிக்கொம்பு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 11ம் தேதி தொடங்கியது. வருகிற 17ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று சன்னதியில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள், குடகனாற்று கரையில் கும்ப நதியில் காலை 7.20 மணிக்கு எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என முழங்கி மலர் தூவி அழகரை வரவேற்றனர். மேலும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . ஆற்றங்கரையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழகர் செல்லும் வழி எல்லாம் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர் அதனை தொடர்ந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு முக்கிய வீதிகளில் மண்டகப்படி நடைபெற்றது.

குருவித்துறை பெருமாள்

சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாக வைகை ஆற்றில் சித்திர ரத வல்லப பெருமாள் கள்ளழகர் தோற்றத்தில் இறங்கியதாக இங்கு உள்ள கோவில் அர்ச்சகர் மற்றும் கிராம நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, அந்நிகழ்வை இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று நடந்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இங்குள்ள வைகை ஆற்றில் சித்திர ரத வல்லவபபெருமாள் கள்ளழகர் தோற்றத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி கள்ளழகரை வரவேற்றனர்.

போடி சீனிவாச பெருமாள்

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சீனிவாச பெருமாள் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் இட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி கொட்டக்குடி ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர். ஆற்றில் இறங்கிய சீனிவாச பெருமாள் செண்டை மேளம், தாரை தப்பட்டை, பம்பை இசை முழங்க தேவராட்டம் ஆடி நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்தார். பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி பெருமாளை வழிபட்டனர். பக்தர்கள் கருப்பசாமி, கள்ளழகர் வேடமிட்டு தீப்பந்தம் ஏந்தியும், அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

1 More update

Next Story