பழனி பாதயாத்திரை... நகரத்தார் காவடிக்கு உற்சாக வரவேற்பு

கிராம நுழைவாயிலில் இருந்து பாதயாத்திரை குழுவினர் நடந்து வருவதற்கு ஏற்ப ரோடு முழுவதும் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.
காரைக்குடியை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நகரத்தார்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக விரதம் இருந்த அவர்கள், நேற்று காலையில் குன்றக்குடியில் ஒன்று கூடி அங்கிருந்து காவடி சுமந்தபடி பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். 400-க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து சென்றனர்.
இவர்கள் பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, கண்டவராயன்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மார்க்கமாக இன்று காலை மனப்பச்சேரி வந்தடைந்தனர். அங்கு கிராம நுழைவாயிலில் இருந்து ஊர் முழுக்க காவடி அன்பர்கள் நடந்து வருவதற்கு ஏற்ப ரோடு முழுவதும் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது. அவர்களை கிராம மக்கள் குலவை போட்டு உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் தங்குவதற்கு தேவையான இடங்களை வழங்கினர். பின்னர் காவடிகளுக்கு தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சாமியாடி செட்டியார் அருள் வாக்கு வழங்கி விபூதி பிரசாதங்களை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் சமுத்திரப்பட்டிக்கு சென்றடைகின்றனர்.
பாரம்பரியமாக தொன்று தொட்டு நடைபெறும் இந்த பழனி பாதயாத்திரை காவடி அன்பர்களுக்கு வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.






