நாளை பஞ்சமி தினம்.. வாராகி அம்மனை வழிபடுவது எப்படி?

வாராகி தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.
பஞ்சமி திதி ஒரு மகத்தான சக்தி. அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். பஞ்சமி தினம், விரதமிருந்து வாராகி அம்மனை வழிபடுவது சிறப்பு வாய்ந்த தினமாகும்.
சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராகி. அந்த அன்னையை மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் பெண் வடிவம் என்றும் சொல்வதுண்டு. சைவம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வாராகியை வழிபடுகின்றனர்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகி தேவியை வழிபடுவது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், வாராஹி தேவிக்கு சிறப்புக் குரிய நைவேத்தியங்கள்.
எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராகி விளங்குகிறாள்.






