திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

பவித்ரோற்சவத்தின் முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை, இரண்டாம் நாளில் பவித்ர சமர்ப்பணம் மற்றும் கடைசி நாளில் பவித்ர பூர்ணாஹூதி நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, அறிந்தோ அறியாமலோ அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்யும் தவறுகளால் நிகழும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆகம விதிகளின்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. 1962ஆம் ஆண்டு முதல் இந்த பவித்ரோற்சவம் நடைபெறுவதாக நம்பப்படுகிறது.
அவ்வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோத்சவம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான அங்குரார்ப்பணம் நாளை (4.8.2025) நடைபெறுகிறது.
பவித்ரோற்சவத்தின் முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை, இரண்டாம் நாளில் பவித்ர சமர்ப்பணம் மற்றும் கடைசி நாளில் பவித்ர பூர்ணாஹூதி நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி (ஸ்னாபன திருமஞ்சனம்) நடைபெறும்.
பவித்ரோற்சவ நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொளளப்படுகின்றன. பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, நாளை (4.8.2025) சஹஸ்ர தீப அலங்கார சேவை, நாளை மறுநாள் (5.8.2025) அன்று அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, 7.8.2025 அன்று திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று நாட்களிலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.






