ஜெபமே ஜெயம்: ‘நீ நிச்சயமாக ராஜாவாயிருப்பாய்...'


ஜெபமே ஜெயம்: ‘நீ நிச்சயமாக ராஜாவாயிருப்பாய்...
x

விசுவாசிகள் தங்கள் முயற்சிகளை சரியான வழியில் செய்து கர்த்தரை நோக்கி வேண்டினால் கர்த்தர் நிச்சயம் காரியங்களில் வெற்றியை திகழச்செய்வார்.

அன்பானவர்களே; ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும், வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்கள், மன விருப்பங்கள் இருக்கும். தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த உயர்வை விரும்பாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அடுத்த கட்ட முயற்சிகள், உயர்வுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும் அவ்வளவு தான்.

வேதம் சொல்கிறது: 'தன் வேலையில் ஜாக்கிரதையா யிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்'. (நீதி மொழிகள் 22:29)

வேதாகம தகவல்:

தாவீது என்றொரு சாதாரண மனிதர் இருந்தார், அவருடைய தொழில் ஆடுகளை மேய்ப்பது. அவர் தன்னுடைய, வழிகளில், நடைகளில், தேவனை சார்ந்து இருந்ததால் கர்த்தர் அவரை அசாதாரணமானவராக மாற்றினார்.

ஆடுகளை மேய்த்து, ஆடுகளுக்கு பின் சென்று கொண்டிருந்த தாவீதை, இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக மாற்றினார். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்காக தாவீது ராஜா கடந்து வந்த பாதை கரடு முரடான பாதை, கண்ணீர்களும், வேதனைகளும் நிறைந்த பாதை. ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் கர்த்தரை சார்ந்து இருந்ததால் கர்த்தர் அவரை கரம் பிடித்து வழி நடத்தினார்.

தாவீது, ராஜா ஆவதற்கு முன்பாக சவுல் என்பவர் இஸ்ரேல் தேசத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார். சவுல் கர்த்தருடைய வார்த்தைக்கு சரியாக கீழ்ப்படியாமல் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து கொண்டிருந்ததால் தாவீதை அவன் இடத்திற்கு ராஜாவாக கர்த்தர் தேர்வு செய்தார்.

சவுல் நாளுக்கு நாள் தாவீதுக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருந்தார். தாவீதை கொலை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முயற்சித்துக் கொண்டிருந்தார். சவுல் தன்னை கொலை செய்ய தேடி வருவதை அறிந்து தாவீது காட்டில் மறைந்திருந்தார்.

வனாந்தரத்தில் சவுல் ராஜா தனியாக செல்லும்போது தாவீதின் கரத்தில் மாட்டிக்கொண்டார். தாவீது, சவுலுக்கு பின்சென்று அவருடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக் கொண்டார். பின்னர் சவுலிடம், 'என் கையில் இருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலை பாரும். என் கையிலே பொல்லாப்பும், துரோகமும் இல்லை என்றும், உமக்கு எதிராக நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்து கொள்ளும். நீர் என் பிராணனை வாங்க துடித்து அதை வேட்டையாட நினைக்கிறீர், ஆகவே கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுவாக நின்று நியாயம் விசாரித்து என் காரியத்தில் உமக்கு நீதியை செய்வாராக. நான் உம் மீது, உமக்கு எதிராக கை போடுவதில்லை' என்றார்.

தாவீதின் இந்த வார்த்தைகளை சவுல் கேட்டவுடனே சத்தமிட்டு அழுது தாவீதை பார்த்து, 'நீ என்னை பார்க்கிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய். நானோ உனக்கு தீமை செய்தேன். கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும் நீ என்னை கொன்று போடவில்லை. இன்று நீ எனக்கு செய்த இந்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக', என்றார்.

இதுகுறித்து வேத வசனம் கூறுவதை பாருங்கள்:

'என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப்பாரும். உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக் கொண்டேன். என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றஞ் செய்யவில்லை என்றும் அறிந்து கொள்ளும். நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்'. (1 சாமுவேல் 24:11)

'கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர்தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக. உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை'. (1 சாமுவேல் 24:12)

'கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்'. (1 சாமுவேல் 24:15)

ஒரு மன்னன் தனக்குப் பின்பாக தன்னுடைய மகன் தான் ராஜ்ஜியபாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவான். ஆனால் கர்த்தருடைய கரத்தின் செயலைப் பாருங்கள். ராஜாவின் வாயினாலேயே, தாவீதைப் பார்த்து 'நீ ராஜாவாக நிச்சயமாக இருப்பாய்' என்று சொல்ல செய்கிறார். இதுதான் கர்த்தருடைய கரம்.

பிரியமானவர்களே; இந்த வேதாகம சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்முடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாய் இருந்தால் நம்முடைய பகைவர்களும் நம்மிடத்தில் வந்து சமாதானம் பேசும்படி செய்வார், சமாதானம் பேசும்படி மட்டுமல்ல அவர்கள் வாயிலிருந்து ஆசீர்வாதமான வார்த்தைகளையும் பேச செய்வார்.

எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் நம்முடைய முயற்சிகளை சரியான வழியில் செய்து கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டிருக்கும் பொழுது நம்முடைய காரியங்களில் வெற்றியை திகழச்செய்வார்.

வேலைவாய்ப்பு, கடன் தொல்லை, குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி வேதனையோடு காத்துக்கொண்டு இருக்கின்றீர்களா? உங்கள் அனைத்து காரியங்களிலும் வெற்றியை, உயர்வைத் தந்து ஆசீர்வதிப்பதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதுமானவராக இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிற தேவனாய் இருக்கிறார்.

-டாக்டர் ஒய்.ஆர்.மானெக்ஷா, நெல்லை.

1 More update

Next Story