திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பெருவிழா தொடங்கியது

விழா நாட்களில் தினமும் இரவில் பெருமாள், தாயார் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோவில் கோவில் உள்ளது. பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடைய தலம். சோழ நாட்டில் நம்மாழ்வார் பாடிய ஐந்து திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பெருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு புரட்டாசி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர்கள் பொன்னப்பன், பூமாதேவி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெறுகிறது. காலையில் வெள்ளி பல்லக்கிலும், இரவில் சேஷ, கருட, அனுமந்த, வெள்ளி யானை, வெள்ளி சூரிய பிரபை என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள், தாயார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். புரட்டாசி பெருவிழா ஏற்பாடுகளை தக்கார் தா. உமாதேவி, உதவி ஆணையர் ஞா. ஹம்ஷன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.






