ராமேஸ்வரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தடைந்ததும், முளைப்பாரியை கடலில் கரைத்து வழிபாடு செய்தனர்.
ராமேஸ்வரம் ராம தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 87-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா கடந்த 12-ந்தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி அன்று இரவு அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். திட்டக்குடி சந்திப்பு சாலை, கோவில் ரத வீதி சாலை வழியாக அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து முளைப்பாரியை கடலில் கரைத்து வழிபாடு செய்தனர்.
முளைப்பாரி ஊர்வலத்தின்போது முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று இரவு 7 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்று அம்மனுக்கு சந்தன அபிஷேகமும் நடைபெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதேபோல் ராமேஸ்வரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்களிலும் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகின்றது.






