வீரசிங்க மடம் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவாடானை தாலுகா முத்துராமலிங்கபுரம் என்ற வீரசிங்கமடம் கிராமத்தில் வீரசிங்க மடம், கண்கொள்ளான் பட்டினம், சோளியக்குடி, கடம்பனேந்தல், கானாட்டாங்குடி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட செல்லியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான இக்கோவில், கடல் தண்ணீரில் விளக்கு எரிய வைத்து அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் என்ற சிறப்பு பெற்றது.
சிறிய அளவில் இருந்த இக்கோவிலை புனரமைத்து அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய கோவிலாக கட்டியெழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஐந்து கிராம மக்கள் இணைந்து வீரசிங்கமடம் அங்கமுத்து வாண்டையார் தலைமையில் 10 பேர் கொண்ட திருப்பணி குழுவை அமைத்து திருப்பணிகள் செய்தனர்.
அம்மனுக்கு பிரம்மாண்டமான முறையில் மூன்று கலசங்களுடன் கூடிய மூலஸ்தான கோபுரம் கட்டப்பட்டது. இதுதவிர பாலகணபதி, பாலமுருகன், அழகையா, காளியம்மன் கருப்பண சுவாமிக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைத்து பிரம்மாண்டமான மண்டபம் கட்டப்பட்டது. அம்மன் கோவிலுக்கு நுழைவு வாயிலில் கிழக்கு கடற்கரை சாலையில் விநாயகர் கோவில் மற்றும் கூடலூர் பிச்சை யாதவ் குடும்பத்தினர் சார்பில் உபயமாக கட்டிக் கொடுக்கப்பட்ட தோரண வாயில் போன்ற திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கருவறையில் செல்லியம்மனுக்கு புனித நீர் அபிஷேகமும் மகா அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா கமிட்டினர் சார்பில் நன்கொடையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், 5 கிராம பெண்கள் கலந்து கொண்ட கும்மி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.






