நாகை: சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கையில் இருமலர்க்கண்ணி அம்மன் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் நேற்று காலை ருத்ர ஹோமத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.
ரிஷப வாகனத்தில் சோமஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சுரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






