திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் - அலங்கார பணிகள் தீவிரம்

திருச்செந்தூரில் நாளை சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடி,
முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
இதற்காக திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மொத்தம் 18 தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த விழாவின் 6-வது தினமான நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு, திருக்கோவிலில் அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 2 டன் மலர்கள், பழங்களைக் கொண்டு கோவில் முகப்பில் அலங்காரம் செய்யப்படுகிறது. அலங்காரத்திற்கு செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களும், கரும்பு, அன்னாசி, மாம்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களும் பயன்படுத்தப்படுகின்றன.






