தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் 400 வருடங்களுக்கு மேல் பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு பகல்பத்து இராப்பத்து வெகு விமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சௌந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் அர்ச்சனைகள் செய்யப்பட்டு பின்னர் சன்னதியில் இருந்து உற்சவர் சௌந்தரராஜ பெருமாள் புறப்பட்டு பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சொர்க்க வாசல் என்று அழைக்கப்படும் பரமபத வாசலை பெருமாள் வந்து அடைந்தார். அதனை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சொர்க்கவாசல் திறக்கும் பொழுது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள் இன்று முழுவதும் கோவிலின் வடக்குப்புறம் உள்ள பரமபத மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் அன்னக்கொடி மற்றும் செயல் அலுவலர் யுவராஜ், பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஜெகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story