தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் அருகே ஸ்ரீவாரி மெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நேற்று கார்த்திகை வனபோஜன உற்சவம் நடந்தது. அதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பட்டு சென்று பார்வேடு மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜன உற்சவம் நடந்தது. உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அங்குள்ள மண்டபத்தில் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
வனபோஜன உற்சவத்தையொட்டி அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் அன்னமயா பக்தி சங்கீர்த்தனங்களை பாராயணம் செய்தனர்.
உற்சவத்தில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார், ரமேஷ்பாபு, கோவில் ஆய்வாளர்கள் தனசேகர், முனிகுமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.