தைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் 2-ந் தேதி நீராடல்

அழகர்மலை உச்சியில் இருக்கும் நூபுரகங்கைக்கு சென்று அங்கு நீராடி வருவது தனி சிறப்புடையதாகும்.
மதுரை,
மதுரை அருகே அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலானது, 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழா வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அன்று மாலையில் 7 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாதன் சேவை நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியாக 2-ந் தேதி காலை 6.45 மணியில் இருந்து 7.15 மணிக்குள் பல்வேறு பூஜைகளுக்கு பிறகு, கோவிலில் இருந்து சகல பரிவாரங்களுடன் அலங்கார பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டு, மலைப்பாதை வழியாக அழகர்மலைக்கு கள்ளழகர் செல்கிறார். வழியில் அனுமன் கோவில், கருட தீர்த்த எல்கையில் பூஜைகள், தீபாராதனைகள் நடக்கின்றன.
நூபுர கங்கைக்கு சென்றதும், அங்குள்ள மாதவி மண்டபத்தில் 10.35 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்படும். அதன் பின்னர் நூபுர கங்கை தீர்த்தத்தில் அழகர் மணிக்கணக்கில் நீராடி திருமஞ்சனம் நடைபெறுகிறது. பிறகு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது.
மாலையில் அங்கிருந்து சகல பரிவாரங்களுடன் புறப்பாடாகி வந்த வழியாகவே கோவிலுக்குள் இருப்பிடம் சேர்கிறார். இத்துடன் 3 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆண்டில் ஒரு நாள் மட்டும், கள்ளழகர் பெருமாள், 4 கி.மீ. தூரம் உள்ள அழகர்மலை உச்சியில் இருக்கும் நூபுரகங்கைக்கு சென்று அங்கு நீராடி வருவது தனி சிறப்புடையதாகும்.






