தமிழ் புத்தாண்டு: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழ் புத்தாண்டு: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x

தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி சம்பந்த விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்ததல் நிகழ்ச்சியும் நடந்தது.

கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தார். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

1 More update

Next Story