நாதஸ்வரம்-தவில் தவிர்க்கப்படும் ஆலயம்

அழகியபாண்டியபுரம் அழகிய நம்பி கோவிலில் பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டும் ஒலிக்கப்படுகிறது.
நாகர்கோவிலுக்கு அருகே உள்ள ஊர் அழகியபாண்டியபுரம். இங்குள்ள அழகிய நம்பி கோவிலில் அருளும் குழந்தைக் கண்ணன், தூங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது தூக்கம் கலையாமல் இருக்கும் பொருட்டு நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கே இசைக்கப்படுவது இல்லையாம். பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டும் ஒலிக்கப்படுகிறது. திருவிழா சமயங்களில் மட்டும் நாதஸ்வரம், தவில் பயன்படுத்துகிறார்கள்.
• நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.
• கேரள மாநிலம் குருவாயூரில் எழுந்தருளி ஆலயம் இருக்கும் உன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர்.
• சென்னை மயிலாப்பூரில் ரங்கா சாலையில் கோவில் கொண்டுள்ள கண்ணனின் விக்கிரகம், தங்கத்தை உரசிப் பார்க்கும் டச்-ஸ்டோன் என்று சொல்லப்படும் ஒரு வகைக் கல்லினால் ஆனது.
• ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோவிலில் எட்டு யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் சந்தானகோபாலன். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த திருத்தலம் இது என்கிறது தலபுராணம்.
• குருவாயூர் கிருஷ்ணன், அம்பலப்புழா கிருஷ்ணன் மற்றும் திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி ஆகிய மூலவர் சிலைகளை மகாவிஷ்ணுவே உருவாக்கினார். இந்த மூன்று கோவில்களிலும் பிரசாதம், பால் பாயாசம்தான்.






