முருகனின் அறுபடை வீடுகளின் தனிச்சிறப்புகள்

தமிழ்நாட்டில் இந்துக்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது, அவர்களிடம் இருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக இருக்கும் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களிலும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருநாளில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதும், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்துவதும்தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
தைப்பூச நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். தனிச்சிறப்பு பெற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.
திருச்செந்தூர்
அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.
பழனி
மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.
சுவாமிமலை
தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.
திருத்தணி
சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம்.
பழமுதிர்சோலை
அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.
நாளை மறுநாள் (11-2-2025) தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.






