வாமன அவதாரத்தின் சிறப்புகள்


வாமன அவதாரத்தின் சிறப்புகள்
x

வந்திருப்பது பகவான் என்பது தெரிந்தும், கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத காரணத்தால் மகாபலி சக்கரவத்தி தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.

மகா விஷ்ணு தனது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை எடுத்த தினம், வாமன அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத வளர்பிறை துவாதசியில் என புராணங்கள் சொல்கின்றன. அதனால் இந்த நாள் வாமன ஜெயந்தி மற்றும் வாமன துவாதசி என கொண்டாடப்படுகிறது.

பக்த பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி, அசுர அரசர்களிலேயே மிக அதிக வலிமை வாய்ந்தவராக திகழ்ந்தார். இவர் தனது தவ வலிமையால் மூவுலகங்களையும் அடக்கி ஆண்டு பெருமைகொண்டார். தேவர்களாலும் மகாபலியை எதிர்த்து நிற்க முடியவில்லை. இவரது வளர்ச்சியைப் பார்த்து அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு அபயம் அளித்த பகவான், தான் வாக்களித்தபடியே கஸ்யபர், அதிதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவர் குள்ளமான உருவம் கொண்டிருந்ததால் வாமனர் என அழைக்கப்பட்டார்.

இதற்கிடையே மகாபலி சக்கரவர்த்தி தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து இடங்களிலும் நிலைநாட்டுவதற்காக ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினார். இந்த யாகத்தின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை தானமாக கொடுப்பதாக மகாபலி அறிவித்தார். தானம் கொடுப்பதாக கூறிய வாக்கை காப்பாற்றினால்தான் யாகமும் முழுமையடையும்.

இதுதான் சரியான சமயம் என புறப்பட்ட வாமன பகவான், யாகத்தை நிறைவு செய்து மகிழ்வோடு இருந்த மகாபலி சக்கரவர்த்தியை அடைந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார். பிராமணச் சிறுவன் ஒருவன் தன்னை அணுகி, வரம் கேட்டது மன்னரை மகிழ்ச்சி பெறச் செய்தது. வந்திருப்பது திருமால், அவரால் மகாபலிக்கு ஆபத்து என்று உணர்ந்த அசுர குரு சுக்ராச்சாரியார், மகாபலியை எச்சரித்தார்.

எனினும் தனது வாழ்வைவிட, வாக்கே முக்கியம் என்று மூன்று அடி தானம் கொடுக்க துணிந்தார் மகாபலி. மண்ணுலகம் முழுவதையும் ஒரே காலால் அளந்துவிட்டு, விண்ணுலகம் முழுவதும் மற்றொரு அடியில் அளந்துவிட்டு இன்னொரு அடி எங்கே எங்கே என்று வினவினார் வாமனர். இதனால் தனது ஆணவத்தை விட்டொழித்த மகாபலி, தனது தலையைக் காண்பித்து இன்னொரு அடி இதோ என்று தலைவணங்கி தன்னையே ஒப்படைத்தார். கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத காரணத்தால் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.

மகாபலியை வாழ்த்தி பாதாளம் நோக்கி அழுத்தினார் பகவான். அன்று முதல் பாதாள உலகத்தின் சக்கரவர்த்தியானார் மகாபலி மன்னர். மகாபலியின் தியாகத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். அவர் விரும்பிக் கேட்ட வரத்தின்படி, ஓணத் திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திப்பதாக நம்பிக்கை.

யாரையும் உருவத்தை வைத்து அவரின் திறமையை, வலிமையை மதிப்பிடக் கூடாது என்பதை இந்த வாமன அவதாரத்தின்மூலம் பகவான் உணர்த்தியிருக்கிறார். பக்தியை மட்டுமின்றி, வாழ்வியல் குணங்களையும் உலகிற்கு உணர்த்துவதே வாமன அவதாரத்தின் நோக்கமாகும்.

வாமன ஜெயந்தி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, சிறப்பு பிரார்த்தனை செய்தும், வாமன பகவானின் தெய்வீக லீலைகளை நினைவுகூர்ந்தும் அவரது அருளைப் பெறுகிறார்கள்.

1 More update

Next Story