சாமிதோப்பு அய்யா கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சாமிதோப்பில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு மற்றும் வாகன பவனி நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான 22.8.2025 அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 23-ம் தேதி மாலையில் மயில் வாகனத்தில் பவனி வந்தார். 24-ம் தேதி இரவு அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 25-ம் தேதி பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 26-ம் தேதி பச்சை சாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 27-ம் தேதி சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல், 28-ம் தேதி கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
29-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர் இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சி தந்தார். 30-ம் தேதி அனுமன் வாகனத்திலும். 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்திர விமான வாகனத்திலுரும் எழுந்தருளி பவனிவந்தார்.
விழாவின் 11-ம் நாளான இன்று (1.9.2025) மதியம் அய்யா பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளியதும், தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதியின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து அய்யாவை வழிபட்டனர். இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பவனி வருகிறார்.






