திருப்பதி வகுல மாதா கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா- சிறப்பு அபிஷேக ஆராதனை

ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக உற்சவ மூர்த்திகளுக்கு அஷ்டோத்தர கலசாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்புத் தாயாக அழைக்கப்படும் வகுலா தேவிக்கு திருப்பதி அருகே கோவில் அமைக்கப்பட்டுள்ளது. திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள பேரூர் கிராமத்தில் உள்ள ஒரு மலையில் ஸ்ரீ வகுல மாதா கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை சுப்ரபாதம் பாடப்பட்டது. காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை தினசரி கைங்கர்யங்கள், அபிஷேகம், அலங்காரம் மற்றும் நைவேத்யம் படைக்கப்பட்டது. காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை விஷ்வக்சேன ஆராதனை, புண்யாஹவசனம், அங்குரார்ப்பணம், மகா சாந்திஹோமம் மற்றும் பூர்ணாஹுதி பூஜை செய்யப்பட்டன.
காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, உற்சவ மூர்த்திகளுக்கு அஷ்டோத்தர கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வகுல மாதா கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, ஐதராபாத்தை சேர்ந்த அமர்நாத் மற்றும் ஷைலஜா ஆகியோர், வகுல மாதாவுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடத்தை வழங்கினர்.