காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்,
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் ஏகாதசியையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி திருவடி கோவிலுக்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னர் அரக்கு, பச்சை, கரை வெண் பட்டு உடுத்தி, வைர, வைடூரிய தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, செண்பகப்பூ, பஞ்ச வர்ண பூ, மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி வீதியில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார். ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு கும்ப ஆரத்தி எடுக்க, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.