தோரணமலையில் 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை


தோரணமலையில் 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 11 Jun 2025 3:48 PM IST (Updated: 11 Jun 2025 3:49 PM IST)
t-max-icont-min-icon

பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலையில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட புராதனமும் பெருமையும் உடைய கோயிலாகும். இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் பௌர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலையில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்ல பண்புகளுடன் வளர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும், நாட்டில் பயங்கரவாதம் அறவே ஒழிந்து வளம் கண்ட நாடாக உலக அரங்கில் சிறந்திட வேண்டும், இளைய சமுதாயம் போதைப் பாதையை தவிர்த்து மேதையாகும் பாதையில் பயணிக்க வேண்டும் என பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர் .

முன்னதாக மலை அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு விநாயகர் கோவில் பின்புறம் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் விருட்சக ராஜ பூஜை நடைபெற்றது. அடுத்ததாக கோவிலில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான நட்சத்திர மரத்தில் மலர் தூவி வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து 27 ராசி நட்சத்திர மரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

1 More update

Next Story