திருப்பதியில் கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
திருப்பதியில் கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட்டுகளை பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கட்டண சேவைகளுக்கு முன்பதிவு செய்து பக்தர்கள் டிக்கெட் பெறுகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள், வரும் 19-ந்தேதி(நாளை) முதல் 21-ந்தேதி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
விண்ணப்பத்தை பதிவு செய்த பக்தர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன்பின் உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.