மலையே உருவாக அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர்

வேறு எங்கும் இல்லாத வகையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலை நான்கு திசைகளிலும் நான்கு வித தோற்றத்தில் காணப்படுவது சிறப்பாகும்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மலையே உருவாக நின்று அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் தென்புறம் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இடப்பாகம் பார்வதியாகவும், வலது பாகம் சிவனாகவும் காட்சியளிக்கிறார். வலது கையில் தண்டாயுதத்தை பிடித்தவாறு கம்பீரமாக உள்ளார்.
கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஏழு தலங்களில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஒன்று. அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலையில் இருந்து பார்த்தால் சங்ககிரிமலை, சேலம் கஞ்சமலை, ஏற்காடு, கொல்லிமலை ஆகியவற்றை காணலாம். ஈரோடு மாநகரில் இருந்தும் இந்த மலையை காணலாம். அதே போல் இங்கிருந்து ஈரோடு மாநகரையும் காணலாம்.
சேலம்-திருச்செங்கோடு சாலை வழியாகவும், ரெயில் பயணத்திலும் செல்லும்போது அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.
வேறு எங்கும் இல்லாத வகையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலை நான்கு திசைகளிலும் நான்கு வித தோற்றத்தில் காணப்படுவது சிறப்பாகும். ஒரு புறம் கைலாய மலை போலவும், ஒரு புறம் ஆண் படுத்திருப்பது போன்ற தோற்றத்திலும், ஒருபுறம் பெண் படுத்திருப்பது போன்ற தோற்றத்திலும், ஒரு புறம் நந்தி போன்றும் காட்சி அளிப்பது விசேஷமாகும். இக்கோவிலில் உள்ள இறைவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பதை போன்றே இந்த மலையும் விளங்கி வருகிறது.
பண்டைய தமிழ்நூல்களான தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி செல்வார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்று விளங்கி வரும் இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் வைகாசி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரபலமாகும். இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், ஈரோடு. ராடு, கரூர், திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.