திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு நாள்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி


பக்தர்கள் உடை மாற்றுவதற்காக தெப்பக்குளத்தின் அருகில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் ஆண்டு முழுவதும் நடைபெறும் உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது பிரம்மோற்சவ விழா ஆகும். இந்த ஆண்டின் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்தது. தினமும் உற்சவர் மலையப்ப சுவாமி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், பகவானின் பல்வேறு அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் விதவிதமாக வேடமணிந்தும், கலைநிகழ்ச்சிகளை நடத்தியும் மாட வீதிகளை அலங்கரித்தனர்.

விழாவின் ஐந்தாவது நாளில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் கடைசி நாளான இன்று காலை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருடன் புஷ்கரணிக்கு (தெப்பக்குளம்) எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு புஷ்கரணியில் தீர்ர்த்வாரி நடைபெற்றது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டபடி புனித நீராடினர்.

தீர்த்தவாரியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புஷ்கரணியில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆண் மற்றும் பெண் பக்தர்கள் உடை மாற்றுவதற்காக புஷ்கரணியின் அருகில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சக்கர ஸ்நானத்தின் புனிதத்துவம் நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால், இன்று நாள் முழுவதும் பக்தர்கள் புனித நீராடலாம். பக்தர்கள் முண்டியடிக்காமல் படிப்படியாக பொறுமையாக சென்று புனித நீராடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

1 More update

Next Story