திருப்பதி பிரம்மோற்சவம்: தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி கொடுத்த மலையப்ப சுவாமி


தினத்தந்தி 11 Oct 2024 9:19 AM IST (Updated: 11 Oct 2024 9:24 AM IST)
t-max-icont-min-icon

சந்திர பிரபை வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 8-ம் தேதி நடந்தது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் 7-ம் நாளான நேற்று காலையில், சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பத்ரி நாராயணராக எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தர்பார் கிருஷ்ணர் அலங்கார தரிசனத்தை காண்பதற்காக மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளும் சுவாமியை தரிசனம் செய்வதால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பதி பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை செயல் அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகன சேவையில் பங்கேற்றனர்.

1 More update

Next Story